செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க.வும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- கவுதமன் பேட்டி

Published On 2019-06-14 15:00 GMT   |   Update On 2019-06-14 15:00 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க.வும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது மற்றும் வழக்குபதிவு செய்ததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இயக்குனர் கவுதமன் சந்தித்தார்.

பின்னர் கரியாப்பட்டினம் செண்பகராய நல்லூரில் எண்ணெய் நிறுவனம் சார்பில் ஆழ்துளை ஆய்வு கிணறு அமைக்கப்பட்டிருந்த வளாகத்தில் எஞ்சியுள்ள கட்டமைப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் இயக்குனர் கவுதமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம் திருக்கார வாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரையில் 474 சதுர கிலோ மீட்டர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த 2-வது கட்டமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மாநில அரசு அதை ஆதரித்துள்ளது. மக்கள் கருத்தை அறியாமல் செயல் படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கரியாப்பட்டினம் மக்கள் மீது போலீசார் அத்து மீறியுள்ளனர். 40 பெண்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து அவமானப்படுத்தி இன்னும் அவர்கள் கையெழுத்து போட அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் காவல் துறையின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் எந்த திட்டங்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற திட்டங்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் தற்போதைய அரசு அதற்கு நேர் மாறாக உள்ளது.

தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு ஹைட்ரோ கார்பன் நீட் போன்றவைகளை தி.மு.க. தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையெனில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News