செய்திகள்

கொடைக்கானலில் பருவநிலை மாற்றத்தால் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் வீழ்ச்சி

Published On 2019-05-28 14:47 GMT   |   Update On 2019-05-28 14:47 GMT
கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் மற்றும் கஜா புயலின் தாக்கம் காரணமாக இந்த வருடம் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மலைவாழ் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் அடைந்து விற்பனைக்கு வரும். ஒவ்வொரு வருடமும் அதிக மகசூல் கிடைக்கும் சூழலில் பழங்களின் தரவாரியாக கிலோ 100 ரூபாய் அதிகபட்சமாக 180 ரூபாய் வரை விற்கப்படும்.

இந்த பிளம்ஸ் பழங்களை கொடைக்கானலுக்கு மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வாங்கிச்செல்வார்கள். கொடைக்கானலில் தற்பொழுது பருவநிலை மாற்றம் மற்றும் கஜா புயலின் தாக்கம் காரணமாகவும் இந்த வருடம் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது.

மேலும் பிளம்ஸ் பழங்கள் முழு விளைச்சல் அடையாமலும் காய்களாகவே மரத்தில் காட்சியளிக்கிறது. அதன் பின் பழங்களாக விளைச்சல் அடைந்தாலும் பழங்களின் மேற்புறத்தில் நோய் தொற்று தாக்குதலால் பழங்களின் மேல் புள்ளிகள் உருவாகி அழகான தோற்றம் மாறி காட்சியளிக்கிறது.

இதனால் விவசாயிகளிடம் மொத்தமாக விற்பனைக்கு வாங்கும் வியாபாரிகள் மிக குறைந்த விலையில் வாங்கி சுற்றுலாப்பயணிகளுக்கு ரூ.250 முதல் ரூ.300 ரூபாய்க்கு விற்றுவருவதால் சுற்றுலாப்பயணிகளிடம் பிளம்ஸ் பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. பிளம்ஸ் விளைச்சலில் மகசூல் குறைந்துள்ளதால் மலைவாழ் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பிளம்ஸ் உற்பத்திக்காக செலவிட்ட தொகையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இதனை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட மலைவாழ் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News