செய்திகள்

நடிகர் கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட வேண்டும்- அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு

Published On 2019-05-15 15:30 IST   |   Update On 2019-05-15 15:30:00 IST
நடிகர் கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு கலைச்சேவை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை:

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் சினிமா துறையில் பல்வேறு விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் அவருக்கு அரசியல் ஞானம் இல்லை. அனுபவம் இல்லை. கமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது. அவர் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.

தற்போது இந்து மதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். அவர் சினிமா துறையில் நல்ல கலைஞன். எனவே கட்சியை கலைத்து விட்டு மீண்டும் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவர் போல காட்டிக் கொள்ள நினைக்கிறார். அவருக்கு நிலையான கொள்கை, கருத்து என்று எதுவும் கிடையாது.

இந்த தேர்தலில் தி.மு.க. வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு. க.வை பொறுத்தவரை என்றும் மதச்சார்பற்ற நிலை தான். ஆனால் தி.மு.க.வினர் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் போல ஏமாற்று நாடகம் போடுகிறார்கள். அதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News