செய்திகள்

கள்ள ஓட்டு பதிவானதால் ‘சர்கார்’ பட பாணியில் ஓட்டுப்போட்ட வாக்காளர்கள்

Published On 2019-04-19 06:56 GMT   |   Update On 2019-04-19 06:56 GMT
தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். #LokSabhaElections2019
சென்னை:

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ படத்தில் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டார் என்று வாதாடி ஜெயிப்பது போன்று கதை அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் கூறப்பட்ட 49பி என்ற சட்டப்படி நமது ஓட்டை இன்னொருவர் போட்டுவிட்டாலும் கூட 17 பி படிவம் மூலம் நாம் நமது வாக்கை அளிக்கலாம். இந்த பட காட்சிகளையும் வசனங்களையும் பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விளம்பரங்கள் வெளியிட்டது. இது நேற்றைய தேர்தலில் எதிரொலித்தது. கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.



சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர். நேற்று காலை 11 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோபிநாத், ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சர்கார் பட பாணியில், ‘49 பி’ விதியின்படி, ‘17 பி’ படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, ‘17 ஏ’ படிவத்தில், அவரது ஓட்டை, கோபி நாத் பதிவு செய்தார்.

இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது. அவருக்கும், ‘49 பி’ விதியின் கீழ் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

கோபிநாத்தின் ஓட்டை, கள்ள ஓட்டாக பதிவிட்டவர், ‘பான் கார்டு’ ஆவணம் காண்பித்துள்ளார். எங்கள் ஆவணங்களில், பான் கார்டின் கடைசி மூன்று இலக்க எண்களே பதிவாகி உள்ளன. ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும், கள்ள ஓட்டு பதிவு செய்தவர் குறித்து, எந்த சந்தேகமும் எழவில்லை. கோபிநாத் வந்து விசாரித்த பின் தான், கள்ள ஓட்டு போடப்பட்டது தெரிந்தது. ‘சிசிடிவி’ கேமரா இல்லாததால், கள்ள ஓட்டு போட்டவரின் முகம் பதிவாகவில்லை. இது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி, காட்டுமன்னார்கோவில், பருவ தராஜ குருகுல பள்ளி ஓட்டுச்சாவடியில், வினோத் வெங்கடேசன் (32), என்பவரது ஓட்டும் அதிகாலையே, கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர், டெண்டர் ஓட்டை பதிவு செய்து, சீலிட்ட கவரை, ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கொடுத்தார்.

குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பிலாங்காலை எனுமிடத்தில் உள்ள, ஓட்டுச் சாவடியில் அஜின் மற்றும் ஷாஜி ராஜேஷ் ஆகியோரும், நேற்று, ‘49 பி’ விதியின் கீழ் வாக்களித்தனர். நெல்லை, பேட்டையில், ஆயிஷா சித்திகா, 38, என்ற பெண்ணின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கும், ‘49 பி’ ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

நெல்லை பேட்டை கே.ஓ.பி. 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜாபர்சாதிக் இவரது மனைவி ஆயிஷா சித்திகா (வயது 33). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 178-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் யாராவது இறந்து போனவரின் வாக்கினை செலுத்துமாறு வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறினர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஆயிஷா சித்திகா தனக்கு வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என வாதாடினார். அதற்காக ரூ.2 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தார். பின்னர் அவர் வாக்களித்தார். இந்த வாக்கிற்காக சுமார் 2 மணி நேரம் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணகுடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பணகுடி அஸ்ஸே உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள 48-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். அப்போது அவரது வாக்கினை ஏற்கனவே வேறுநபர் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார்.

இதையடுத்து வாக்குப்பதிவு அலுவலர் முருகன், தாசில்தார் செல்வம் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து மணிகண்டனுக்கு சேலஞ்ச் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். #LokSabhaElections2019

Tags:    

Similar News