செய்திகள்

அனல் காற்றுடன் வேலூரில் 107.6 டிகிரி வெயில் சுட்டெரித்தது

Published On 2019-04-17 06:09 GMT   |   Update On 2019-04-17 06:09 GMT
அக்னி நட்சத்திரம் தொடங்க 10 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் வேலூரில் நேற்று அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. #SummerHeat
வேலூர்:

தமிழகத்தில் பருவமழை தவறியதையடுத்து கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப கோடை தொடங்கியதும் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தியது.

கடந்த 3 நாட்களாக வெயிலின் டிகிரி 105 டிகிரியை தாண்டிய நிலையில் நேற்று 107.6 டிகிரியாக சுட்டெரித்தது. தகித்த வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் வேதனைக்கு ஆளாகினர்.

வேலூர் மட்டுமின்றி மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் நகரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன நடமாட்டமும் குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. குளிர்பான கடைகளிலும், இளநீர் கடைகளிலும், கரும்புச்சாறு, பழரச கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

அப்படி வெளியில் நடமாடினாலும் குடைகளுடன் செல்வதுடன், அடர்த்தியான வண்ணம் கொண்ட நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தியாலான ஆடைகளை அணிய வேண்டும்.

அதிகளவில் நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்பத்தாக்குதல் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்தும், கோடைகால நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.   #SummerHeat



Tags:    

Similar News