செய்திகள்

எம்.சி.சம்பத் தூண்டுதலின் பேரில் என் வீட்டில் வருமானவரி சோதனை- முன்னாள் எம்.எல்.ஏ.அய்யப்பன் குற்றச்சாட்டு

Published On 2019-04-10 09:40 GMT   |   Update On 2019-04-10 09:40 GMT
அமைச்சர் எம்.சி.சம்பத் தூண்டுதலின் பேரில் என் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது என்று முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் குற்றம் சாட்டியுள்ளார். #ministermcsampath #exmlaayyappan

கடலூர்:

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அய்யப்பனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேர உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனையிட்டனர். மேலும் அவரது ஆதரவாளர் பிரகாஷ் உறவினர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் எம்.சி.சம்பத் செயல்பாடு சரியில்லை என்ற காரணத்தினால் நான் அடுத்த கட்ட முடிவுக்கு எனது ஆதரவாளர்களுடன் செல்ல உள்ளேன்.

இது சம்பந்தமாக எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வந்தேன். இந்தக் கூட்டத்தை தடுப்பதற்கும், செல்வாக்கை குறைப்பதற்கும் பொய்யான தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது எனது வீட்டில் ஒன்றும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து விட்டு சென்றனர்.

எனது செல்வாக்கை குறைப்பதற்கும் எனது தலைமையில் ஆதரவாளர்களை சேர்ப்பதை தடுப்பதற்கும், அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கும் இந்த சோதனை நடந்திருக்கலாம்.

அமைச்சர் எம்.சி.சம்பத் அல்லது அவரின் ஆதரவாளர்கள் தூண்டுதல் பேரில் இங்கு சோதனை நடந்து இருக்கும். ஏனென்றால் எனக்கு எங்கும் எதிரிகள் இல்லை. அடுத்த கட்ட முடிவு எடுத்த பிறகு நான் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அ.தி.மு.க.வில் இருந்து நான் செல்வதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத்தின் குடும்ப அரசியல், நிர்வாகிகளை மதிக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

மேலும் எங்களது கோரிக்கைகளை தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால் கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசவில்லை. மேலும் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு ஏற்படுத்த வில்லை. இதனால் தான் நாங்கள் அடுத்தகட்ட முடிவுக்குச் செல்ல உள்ளோம். மேலும் எங்களை அழைத்து பேசுவார்கள் என காத்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு எம்.எல்.ஏவாக இருந்தேன். எனக்கு ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் இருந்து வருகின்றனர். ஆகையால் என் மீது இனி வருங்காலங்களில் அமைச்சர் எம்.சி.சம்பத் பொய் புகார் அளிப்பார்.

நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகிவிட்டேன். ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டேன்.

முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன், மாவட்ட மகளிரணி செயலாளர் நாகரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் காசிநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டனர்.

அதற்கான கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பி உள்ளார்கள். மேலும் இனி வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகும் கடிதத்தை தலைமைக்கு அனுப்ப உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #ministermcsampath #exmlaayyappan

Tags:    

Similar News