செய்திகள்
மணிவண்ணன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - 5வது நபராக மணிவண்ணன் கைது

Published On 2019-04-10 09:07 GMT   |   Update On 2019-04-10 09:07 GMT
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது குற்றவாளியாக மணிவண்ணனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். #PollachiCase #CBCID
கோவை:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில் மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜ், செந்தில், வசந்தகுமார், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (28) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மணிவண்ணனை 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதன்பேரில் மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க மனுவை விசாரித்த நீதிபதி நாகராஜன் அனுமதி வழங்கினார். இதையடுத்து மணிவண்ணனை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

பாலியல் வழக்கில் கைதான பைனாஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகியோருடன் மணிவண்ணனுக்கு எந்தெந்த வகைகளில் பழக்கம் இருந்தது என்று விசாரித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜிடமும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் மணிவண்ணனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் பெண்ணின் சகோதரரை தாக்கியதால் கைதான மணிவண்ணன் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் சேர்க்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5வது நபராக மணிவண்ணனை போலீசார் இணைத்துள்ளனர். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5வது நபராக மணிவண்ணனை கைது செய்தனர்.

இதையடுத்து, மணிவண்ணனை வரும் வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #PollachiCase #CBCID

Tags:    

Similar News