செய்திகள்

தி.மு.க.வால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-04-01 14:28 IST   |   Update On 2019-04-01 14:28:00 IST
தி.மு.க.வால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #LokSabhaElections2019

ஆரணி:

ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வி.ஏழுமலையை ஆதரித்து ஆரணியில் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நல்லவர்கள் எல்லாம் இணைந்த கூட்டணி தான் அ.தி.மு.க. எதிரணியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் அனைவருமே அடாவடி. மத்தியில் 10 ஆண்டுகாலம் அமைச்சரவையில் இருந்த தி.மு.க.வினர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, கடந்த முறை சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் பயனாக காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தார்.

நமது ஆட்சியின் போதே எதிர்கட்சியில் இருப்பவர்கள் வியாபாரிகளை மிரட்டுகிறார்கள். அவர்கள் ஆளுங்கட்சியாக வந்துவிட்டால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

இந்த தேர்தலோடு நாங்கள் காணாமல் போவோம் என்று கூறுகிறார்கள். தி.மு.க.வால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் தற்போது தொடர்வதுடன், கூடுதலாகவும் மக்களுக்கு திட்டங்கள் வழங்கப்படுகிறது’’ என்றார்.

இதனையடுத்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செங்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. அரசு ஏழை எளிய தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கியது. அதைக் கொடுக்கக்கூடாது என, தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்குப்போட்டு தடை செய்து விட்டனர். தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை மீண்டும் வழங்கும்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது, அதன் கூட்டணியில் தி.மு.க.சார்பில் 9 மந்திரிகள் இருந்தார்கள். அவர்கள், தமிழகத்துக்கு எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை. செங்கம் விவசாயம் சார்ந்த பகுதி. இங்குத் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இந்தப் பகுதி வளர்ச்சிக்கு தமிழக அரசு பாடுபடும்.

சமீபகாலமாக தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டீக்கடை முதல், புரோட்டாக்கடை வரை வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை தூண்டி விட்டு, பொதுமக்களின் அமைதியை கெடுக்கிறார்கள். நானும் ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். இதுபோல நடந்ததில்லை.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள கடலைக்கடை சந்திப்பு அருகில் இரவு 9 மணி அளவில் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செங்கத்தில் பிரசாரம் செய்துவிட்டு இரவு 10.35 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வந்தார். பிரசாரம் நேரம் முடிந்துவிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இரட்டை விரலை காட்டிவிட்டு சென்றார்.  #LokSabhaElections2019

Similar News