செய்திகள்
மயூரா ஜெயக்குமார்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

Published On 2019-03-21 06:25 GMT   |   Update On 2019-03-21 06:25 GMT
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbusecase #CBCID
கோவை:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் கோவை வந்து விசாரணை தொடங்கினர்.

மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பார் நாகராஜ் பல்வேறு வகைகளில் தங்களுக்கு உதவி செய்ததாக கூறி உள்ளார். மேலும், பேஸ்புக்கில் அவருடன் நட்பில் இருந்தவர்கள் எந்தெந்த வகைகளில் உதவி செய்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். மேலும், இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PollachiAbusecase #CBCID

Tags:    

Similar News