செய்திகள்

திமுகவை குறை சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல - பிரேமலதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

Published On 2019-03-09 03:37 GMT   |   Update On 2019-03-09 03:37 GMT
கடந்த 10 தினங்களாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இப்போது குறை சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #Premalatha
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வை தில்லுமுல்லு கழகம் என்று கூறும், பிரேமலதா விஜயகாந்த் பின்னர் ஏன் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்படி ஒரு கருத்து தே.மு.தி.க.வுக்கு இருந்தால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்று இருக்கலாமா?



அரசியலில் மாறி மாறி பேசுவது இளம் தலைமுறையினரிடம் அரசியல்வாதிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும். ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பே தீவிரமாக யோசித்து செய்ய வேண்டும்.

கடந்த 10 தினங்களாக தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இப்போது குறை சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல. சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்ததையும், விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் எந்தவொரு கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடுவதில்லை. நாட்டின் பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் கண்டிப்பாக பாடவேண்டும். இதை எல்லாம் செய்யாமல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதும், விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு என்று கூறுவதும் தேர்தல் நேரத்தில் செய்யும் தில்லுமுல்லு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். #KSAlagiri #Premalatha
Tags:    

Similar News