செய்திகள்

மக்களை பற்றி சிந்திக்காமல் உருவானது தான் அதிமுக, பாமக கூட்டணி - சரத்குமார்

Published On 2019-03-08 10:24 IST   |   Update On 2019-03-08 10:24:00 IST
மக்களை பற்றி சிந்திக்காமல் உருவானது தான் அதிமுக - பாமக கூட்டணி என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். #SarathKumar #ADMK #PMK
ஆத்தூர்:

சேலம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தை கட்சி தலைவர் சரத்குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நான் அரசியலுக்கு வந்து 23 வருடங்கள் ஆகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்காக வாக்குகளை சேகரித்து வந்துள்ளேன். தற்போது முதல் முறையாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தேன். நீங்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும்.

கஜா புயல் பாதித்த தமிழகத்தை வந்து பார்க்காத பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வந்ததும் அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்தது. இதனால் தான் நாங்கள் தனியாக நிற்பது என்று முடிவு செய்துள்ளோம்.


விழாவில் சரத்குமார் பேசிய காட்சி.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழக நிதி அமைச்சர் பற்றியும், தமிழக அரசை பற்றியும் குறை கூறி வந்தனர். அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி மக்களை பற்றி சிந்திக்காமல் தங்களை மட்டுமே சிந்தித்து உருவான கூட்டணி. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

அதேபோல் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் அமைத்துள்ள கூட்டணியானது, அ.தி.மு.க. அமைத்த கூட்டணி போன்றது தான்.

தமிழகம் வளர்ச்சி அடைய, ஊழல் இல்லா நல்லாட்சி மலர, புதிய மாற்றம் ஏற்பட ஒத்த கருத்துடைய கட்சிகள், தே.மு.தி.க.வாக இருந்தாலும் சரி, நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை நோக்கி செல்கிறோம். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.  #SarathKumar #ADMK #PMK




Similar News