செய்திகள்

விபத்தில் பெற்றோர் இறந்த சோகத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி

Published On 2019-03-02 09:30 IST   |   Update On 2019-03-02 09:30:00 IST
விபத்தில் பெற்றோர் இறந்த சோகத்திலும் தலையில் கட்டுடன் வந்து மாணவி ஜமீம் மீரா பிளஸ்-2 தேர்வு எழுதினார். பெற்றோர் ஆசைப்படி டாக்டர் ஆவேன் என்ற மனஉறுதியுடன் அவர் தேர்வு எழுதியது அனைவரையும் நெகிழச்செய்தது. #Plus2Exam
நெல்லை:

பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 46). இவருடைய மனைவி மைதீன் பாத்திமா (42). இவர்களுடைய மகள் ஜமீம் மீரா (17). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 27-ந்தேதி ஜமீம் மீரா ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக உடுமலையில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்றுவிட்டு பெற்றோருடன் காரில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு கங்கைகொண்டான் அருகே வந்தபோது அங்கு நின்ற லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் மாணவியின் தந்தை இஸ்மாயில், தாய் மைதீன் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மாணவி ஜமீம் மீரா, உறவினர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் காயம் அடைந்து பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மாணவி ஜமீம் மீரா காயத்துக்கு தலையில் போடப்பட்டிருந்த கட்டுடன் ஆஸ்பத்திரியில் இருந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வந்தார். அவரை உறவினர்கள் அழைத்து வந்தனர்.

விபத்தில் பெற்றோரை இழந்த சோகத்திலும் மாணவி ஜமீம் மீரா தேர்வு எழுதினார். எப்படியாவது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்விலும் வெற்றி பெற்று தனது பெற்றோர் ஆசைப்படி டாக்டர் ஆவேன் என்ற மனஉறுதியுடன் அவர் தேர்வு எழுதியது அனைவரையும் நெகிழச்செய்தது. மாணவி தேர்வு எழுதிய நேரத்தில் தான் அவரது பெற்றோரின் உடல்கள் தியாகராஜநகரில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Plus2Exam

Similar News