செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுமையாக மூடப்படும்? - மதுரை ஐகோர்ட் கேள்வி

Published On 2019-02-25 11:41 GMT   |   Update On 2019-02-25 11:41 GMT
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் எப்போது? முழுமையாக மூடப்படும் என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #MaduraiHCBench #Tasmac
மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் பஸ் நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது அருந்திவிட்டு வருபவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கின்றனர். இதனால் பெண்கள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அந்த கடையை மூட வேண்டும் என மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த கடையை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஆளும் கட்சியினர் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.

அதன்படி இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன? மாவட்ட வாரியாக டாஸ்மாக் வருமானம் எவ்வளவு? முழுமையாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது எப்போது? அடுத்த கட்டமாக எத்தனை கடைகளை மூட உத்தேசிக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இதுகுறித்து விரிவான அறிக்கையை டாஸ்மாக் விற்பனை மேலாண்மை இயக்குநர் மார்ச் மாதம் 4-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #MaduraiHCBench #Tasmac
Tags:    

Similar News