செய்திகள்

கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் 2வது கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்

Published On 2019-02-17 09:07 GMT   |   Update On 2019-02-17 09:07 GMT
கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி இடையே போரூர் வழியாக மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. #MetroTrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-ல் சென்னையில் ‘மோனோ ரெயில் திட்டம்’ தொடங்குவது குறித்து அறிவித்தார். ஜெயலலிதா விரும்பிய மோனோ ரெயில் திட்ட வழித்தடப் பாதைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். போக்குவரத்து நெருக்கடி நிறைந்த போரூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி பாதையில் மோனோ ரெயில் திட்டம் தொடங்குவது சாத்தியமில்லை.

அங்கு 4-வது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைத்து மெட்ரோ ரெயில் விட அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்தனர். கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. உலக வங்கிகள் நிதி உதவி மூலம் இந்த திட்டப்பணிகள் தொடங்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் அதிகாரிகள் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். #MetroTrain
Tags:    

Similar News