செய்திகள்

உறையூரில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை-ரூ.1 லட்சம் பணம் கொள்ளை

Published On 2019-02-10 22:50 IST   |   Update On 2019-02-10 22:50:00 IST
திருச்சியில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 100 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி:

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகைய்யன். இவர் திருச்சி என். எஸ்.பி. ரோட்டில் அரவிந்த் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு முருகைய்யன் மனைவி மற்றும் மகள்களுன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை ஆறுநாட்டு வேளாளர் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டிருந்ததால் காலை 4 மணிக்கு எழுந்து முருகைய்யன் குளிக்க தயாரானார். அப்போது வீட்டின் பீரோ திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருச்சி உறையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டின் முன்புற கதவு பூட்டு திறக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்தது. அதேபோல் வீட்டின் பின்பக்க கதவும் திறந்து கிடந்தது. எனவே கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து பின்புற கதவை திறந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. 

மேலும் முருகைய்யனும், குடும்பத்தினரும் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த அறையிலேயே கொள்ளையன் துணிகரமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். எனவே முருகைய்யன் வீட்டிற்கு நகை பணம் வைத்திருப்பதை அறிந்த ஆசாமியே இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளதும் உறுதியாகி உள்ளது. 

ஏற்கனவே திருச்சி உறையூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பீடிக்கம்பெனி அதிபர் வீடு உள்பட 2 வீடுகளில் இதேபோன்று கதவைத்திறந்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றான். இப்போது மீண்டும் அதேபோன்று கொள்ளை நடந்துள்ளது. அடிக்கடி கொள்ளை நடப்பதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர் கொள்ளையனை பிடித்து திருட்டு சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News