செய்திகள்

‘சின்னதம்பி’ யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

Published On 2019-01-31 07:45 GMT   |   Update On 2019-01-31 08:14 GMT
மயக்க ஊசி செலுத்தி டாப்சிலிப்பில் விடப்பட்ட ‘சின்னதம்பி’ யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது. யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். #ChinnathambiElephant
பொள்ளாச்சி:

கோவை சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையனூர், தாளியூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், ரேசன் கடை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

விவசாயிகளின் புகாரையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 கும்கிகள் உதவியுடன் விநாயகன் என்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சின்னத்தம்பி யானை தப்பியது.

மயக்க ஊசியில் இருந்து தப்பிய ‘சின்னத்தம்பி’ யானை பன்னிமடை, சி.ஆர்.பி.எப் கேம், கதிர்நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றி பயிர்களை சேதப்படுத்தி வந்தது.



சின்னத்தம்பி யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து சலிம், தெப்பக்காடு முதுமலை முகாமில் இருந்து முதுமலை என்ற கும்கிகளும் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்த விஜய், சேரன் ஆகிய கும்கிகள் உதவியுடன் கோவை ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், விரைவு காப்பாட்டு குழுவினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 50 பேர் விடிய, விடிய போராடி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி கடந்த 25-ந்தேதி சின்னதம்பி யானையை பிடித்தனர்.

3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் சின்னத்தம்பி யானையை கும்கிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றினர். லாரியில் யானையை ஏற்றும்போது அதன் தந்தங்கள் முறிந்தன. கும்கிகள் குத்தியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. லாரியில் கொண்டு செல்லப்பட்ட சின்னதம்பி யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை டாப்சிலிப் பகுதிக்கு அன்று இரவே கொண்டு செல்லப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னர் டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டது.

ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டது. 26-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்பட்டதில் விடப்பட்ட வரகளியாறு பகுதியிலேயே தண்ணீர், உணவு அருந்தி அந்த பகுதிலேயே தூங்கியது தெரியவந்தது. நேற்று முதல் சின்னத்தம்பி யானை மெதுவாக நடந்து ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊரை நோக்கி வந்தது. இந்த ஊர் ஆழியாறில் இருந்து 9 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

சின்னதம்பி யானை இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

இன்று காலை 6 மணியளவில் ரோட்டில் நடந்து வந்தது. யானை புகுந்த தகவல் தெரியாத சிலர் வழக்கம்போல் வெளியில் நடமாடினார்கள். யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். கம்பீரமாக அதே சமயம் தந்தங்கள் முறிந்த நிலையில் சுற்றிய யானை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னத்தம்பி என்ற யானை என்பதை அறிந்தனர்.

சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது அது சின்னதம்பி யானைதான் என்பதை உறுதிப்படுத்தினர். காட்டுயானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இதேபோன்று ஊருக்குள் நுழைந்துகொண்டே இருந்தால் அதனை வளர்ப்பு யானையாக முகாமில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். #ChinnathambiElephant
Tags:    

Similar News