செய்திகள்

தமிழக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கி உள்ளது- கமல்ஹாசன் பேட்டி

Published On 2019-01-28 10:00 GMT   |   Update On 2019-01-28 10:00 GMT
தமிழக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கி உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamal #makkalneethimaiyam

கடலூர்:

கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ரவுடி என கூறவில்லை. படித்தவர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். அதன்பேரில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

40 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் செய்யாததை நான் செய்வேன். தூய்மையான அரசை கொண்டு வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திராவிடம் என்பது 2 கட்சிகள், 3 குடும்பங்களுக்கு சொந்தமானது கிடையாது. நாடு தழுவியது.

கடலூர் மாவட்டத்தில் நான் 2 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரி கிறது. தமிழகத்தில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மறதியாக உள்ளார்கள். அதை போக்க வேண்டும்.

எல்லோரும் சேர்ந்தால்தான் தூய்மையான அரசியலை கொடுக்க முடியும். என்னைப்போல் மக்களும் மாற்றம் வேண்டும் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.

மதுரைக்கு பிரதமர் வந்தபோது ‘மோடி கோ-பேக்’ என்ற வாசகம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது. இது அரசியலுக்காக நடக்கிறது. அரசியல் தீண்டத்தகாதது அல்ல. அரசியலில் இழந்த மாண்பை மீட்க வேண்டும்.

அனைவரும் சேர்ந்துதான் மது விலக்கை கொண்டு வர முடியும். அரசியல் காரணங்களுக்காக ஏழைகள் ஏழைகளாக உள்ளனர்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #kamal #makkalneethimaiyam 

Tags:    

Similar News