செய்திகள்
பிளேக் மாரியம்மன் சிலையின் வலதுபுறம் கிளி அமர்ந்திருந்த காட்சி.

கோவையில் வளர்த்தவர் ‘போ’ என்று கூறியதால் அம்மனிடம் தஞ்சம் அடைந்த ‘கிளி’

Published On 2019-01-16 08:09 GMT   |   Update On 2019-01-16 08:09 GMT
கோவையில் வளர்த்தவர் ‘போ’ என்று கூறியதால் அம்மனிடம் தஞ்சம் அடைந்த ‘கிளி’ 2 நாட்களுக்கு பின் பறந்து சென்றது.
கோவை:

கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). பிட்டர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

முருகேசன் தனது வீட்டில் 1 வருடமாக ஸ்ரீ என்ற பச்சை கிளியை வளர்த்து வந்தார். இந்த கிளியை முருகேசனின் மகனின் நண்பர் பரிசளித்து இருந்தார். வீட்டில் உள்ள அனைவரிடமும் பாசமாக பழகும் இந்த கிளி முருகேசனின் மனைவி விஜயலட்சுமியை பப்பு என்று அழைக்கும்.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகேசன், அவரது மனைவி, மகன்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் மேல் பகுதிக்கு சென்று கிளி அமர்ந்து கொண்டது. கிளியை முருகேசனின் மகன் மிரட்டும் வகையில் போ என்று கூறி உள்ளார். இதில் கோபம் அடைந்த கிளி பறந்து சென்றது. நீண்ட நேரம் ஆகியும் கிளி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் கிளியை முருகேசன் அக்கம் பக்கத்தில் தேடினார்.

அப்போது கிளி அந்த பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இருப்பது தெரிய வந்தது.

அங்கு சென்று முருகேசன் பார்த்தபோது கிளி கோவிலில் உள்ள அம்மன் சிலையின் வலது தோளில் அமர்ந்து இருந்தது. கிளியை முருகேசன் ஸ்ரீ வா வா என்று பல முறை அழைத்தார். ஆனால் கிளி வரவில்லை. மேலும் கடந்த 2 நாட்களாக கிளி அம்மன் சிலையை விட்டு கீழே இறங்கவில்லை.

இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. கிளியை பார்க்க அங்கு ஏராளமானோர் திரண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனின் வலது கையில் கிளி அமர்ந்து இருப்பது போல இந்த கிளியும் அமர்ந்து இருந்ததால் பொதுமக்கள் கிளியை அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து கிளியின் உரிமையாளர் முருகேசன் கூறும்போது

ஸ்ரீ எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லாது. மிளகாய் பழம், கொய்யா பழம் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். பேசும், கோபம் வந்தால் யாரிடமும் பேசாமல் இருக்கும். என் மகன் போ என்று கோபமாக கூறியதால் கோபித்துக்கொண்டு பறந்து சென்ற கிளி அம்மன் மேல் அமர்ந்துள்ளது. எவ்வளவு அழைத்தும் வரவில்லை. எனவே கிளியை அம்மனுக்கே காணிக்கையாக வழங்குகிறேன் என்றார்.

கடந்த 2 நாட்களாக அம்மன் சிலையின் மீது அமர்ந்து இருந்த கிளி இன்று காலை பறந்து சென்றது.

Tags:    

Similar News