செய்திகள்
கரூர் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த குட்கா, புகையிலை பொருட்கள்

கரூர் குடோனில் பதுக்கிய 5½ டன் குட்கா பறிமுதல்

Published On 2019-01-16 04:13 GMT   |   Update On 2019-01-16 04:13 GMT
கரூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gutkhaseized
கரூர்:

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சோதனை சாவடியில் பரமத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வேன் வந்தது.

அதனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பெங்களூருவில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு கடத்தி வரப்பட்டதும், கரூர் ராயனூர் பகுதியில் உள்ள குடோன்களில் குட்கா பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

உடனே நாமக்கல் போலீசார் கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்படி தான்தோன்றிமலை போலீசார் ராயனூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கு வெவ்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் 216 நைலான் சாக்கு மூட்டைகள், 202 அட்டை பெட்டியில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 5½ டன் ஆகும். சந்தை மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கடத்தலில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ஏ.கே.சி. காலனி பகுதியை சேர்ந்த தங்கராஜ், கரூர் ராயனூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது 47) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கரூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Gutkhaseized

Tags:    

Similar News