செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்

பொறையாறு அருகே ரூ.1 கோடி கடத்தல் தங்கத்தை பதுக்கிய 3 போலீசார் சஸ்பெண்டு

Published On 2019-01-04 10:30 IST   |   Update On 2019-01-04 10:30:00 IST
பொறையாறு அருகே கடத்தல் தங்கத்தை பங்கு போட முயன்ற போலீசார் 3 பேரை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். #Smugglinggold
பொறையாறு:

இலங்கையில் இருந்து வேதாரண்யம் வழியாக சென்னைக்கு அரசு பஸ்சில் தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கடந்த 1-ந் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் அன்று மதியம் 1 மணியளவில் நாகை மாவட்டம் பொறையாறு அடுத்த நண்டாலார் சோதனை சாவடியில் பொறையாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரர் ஜெயபால், வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ்காரர் விஜயகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் ஒரு பை இருந்தது. இந்த பையை போலீசார் யாருடையது? என்று கேட்டனர். ஆனால் யாரும் உரிமை கோரவில்லை.

இதனால் போலீசார் 3 பேரும் , அந்த பையை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பையை பறிமுதல் செய்துகொண்டு எடுத்து சென்றனர்.

இதற்கிடையே சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு காரில் 3 பேர், சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த ஜெயபால், சீனிவாசன், சதீஷ் ஆகியோர் கடத்தல் தங்கத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் உங்களுக்கு ரூ.20 லட்சம் தருகிறோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் போலீசார் 3 பேரும், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யவில்லை என்று மறுத்து விட்டனர். இதை கேட்டு காரில் வந்த 3 பேரும் திரும்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு நபர், அரசு பஸ்சில் வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை போலீசார் 3 பேரும் பறிமுதல் செய்து பங்குப்போட்டு கொண்டு விட்டனர் என்று கூறினார்.

இதையடுத்து சீர்காழி டி.எஸ்.பி. சேகர் தலைமையில் போலீசார் விரைந்து நண்டாலார் சோதனை சாவடிக்கு சென்று அங்கு இருந்த சீனிவாசன், ஜெயபால், சதீசிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யவில்லை என்று மறுத்தனர்.

பின்னர் நாகை எஸ்.பி. விஜயகுமார் நேரிடையாக 3 போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து 3 போலீசாரும், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்ததை ஒப்புக்கொண்டனர். 3 பேரும் தங்கத்தை விற்று பங்கு போட முடிவு செய்திருந்ததையும் தெரிவித்தனர். சோதனை சாவடி அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் குழிதோண்டி புதைத்து இருப்பதையும் தெரிவித்தனர்.

இதையடுத்து கடத்தல் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடத்தல் தங்கத்திற்கு பேரம் பேச வந்த 3 பேர் காரில் தப்பி சென்று விட்டதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கடத்தல் தங்கத்தை பங்கு போட முயன்ற போலீசார் ஜெயபால், சீனிவாசன், சதீஸ் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தல் தங்கத்தை பதுக்கிய சம்பவத்தில் 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் நாகை மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #Smugglinggold

Tags:    

Similar News