செய்திகள்

சென்னையில் 12½ டன் பிளாஸ்டிக் பறிமுதல்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2019-01-03 09:16 GMT   |   Update On 2019-01-03 09:16 GMT
சென்னையில் 1-ந்தேதி 2.25 மெட்ரிக் டன், 2-ந்தேதி 8.35 மெட்ரிக் டன் என மொத்தம் 12.48 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #PlasticBan
சென்னை:

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு இயற்கை வளமும் சீரழிகிறது.

அதனால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல் கட்டமாக தடை விதித்து அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பை, கவர், டம்ளர் போன்றவற்றை சேகரித்தனர். பொதுமக்கள் தாமாக முன் வந்து பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்து வருகிறார்கள். மேலும் புத்தாண்டு தினத்திலும் பிளாஸ்டிக் சேகரிப்பில் ஈடுபட்டார்கள். 15 மண்டல அலுவலகங்களிலும் அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் களம் இறங்கினர். 31-ந்தேதி சுமார் 1.88 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

1-ந்தேதி 2.25 மெட்ரிக் டன், 2-ந்தேதி 8.35 மெட்ரிக் டன் என மொத்தம் 12.48 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ஓட்டல்கள், கடைகள், திருமண மண்டபங்கள், மால்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றிற்கு சென்ற ஊழியர்கள் தடையை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆரம்ப கட்டத்தில் வியாபாரிகள், பொது மக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் அபாராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற் சாலைகள், வியாபாரிகள், குடோன்கள் தயாரிப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஒரே விதமான அபராதம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது. எந்தெந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு எவ்வாறு அபராதம் விதிக்க வேண்டும் என்பது குறித்து அரசுக்கு சென்னை மாநகராட்சி செயல் வடிவம் அனுப்பியுள்ளது. இதுபற்றி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிட உள்ளது. #PlasticBan
Tags:    

Similar News