செய்திகள்
கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

ஈரோட்டில் 2-வது நாளாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடையடைப்பு

Published On 2019-01-02 10:02 GMT   |   Update On 2019-01-02 10:02 GMT
ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக பிளாஸ்டிக் தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PlasticBan
ஈரோடு:

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களும், பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு பகுதிகளில் 160 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் மாவட்டம் முழுவதும் 350 பிளாஸ்டிக் கடைகள் செயல்படுகின்றன. தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி நேற்று முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.

பிளாஸ்டிக் தடை உத்தரவால் ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜெப்ரீ கூறியதாவது:-

அரசு அறிவித்துள்ள 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் சரியாக அளிக்கவில்லை. இதன் மூலம் சிறு குறு உற்பத்தியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

தற்போது இந்த தடை உத்தரவால் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எங்களது வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ. 15 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது.

நமது அண்டை மாநிலங்களில் இன்னும் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இன்னும் அது எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவர் அவர் கூறினார். #PlasticBan

Tags:    

Similar News