செய்திகள்

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்று தொழில் செய்ய மானியத்துடன் கடன்- அமைச்சர் கருப்பணன்

Published On 2019-01-01 04:39 GMT   |   Update On 2019-01-01 04:39 GMT
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். #PlasticBan #KCKaruppannan
பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மற்றும் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் 928 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 301 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், 38 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருந்தாலும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து வருகிறோம். விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.

கீழ்பவானி வாய்க்கால் 2-ம் போக பாசனத்திற்கு நிலக்கடலை மற்றும் எள் பயிரிடுவதற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும். கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிவாரணத்தொகை கொடுக்கிறதோ இல்லையோ தமிழக அரசு 3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

2011ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து அப்போதைய முதல்வர் தலைமையில் ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

அதில் தண்ணீர் பாக்கெட், உணவு பொருள்கள் பயன்பாடு உள்பட 13 பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாது என்பதால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கேடு ஏற்படுகிறது.

சாக்கடைகளில் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அடைத்து நோய் கிருமி உருவாக காரணமாகின்றன. குளங்களில் பிளாஸ்டிக் பொருட்களாகவே தென்படுகின்றன. பல்வேறு ஆய்வுக்கு பின்னரே பிளாஸ்டிக் தடைக்கு முடிவு செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #PlasticBan #KCKaruppannan
Tags:    

Similar News