செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது
தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசேன் (வயது 30), லாரி டிரைவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர், அதே கிராமத்தை சேர்ந்த வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அன்றே புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அசேனை தேடி வந்தனர். இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புதிய சப்-இன்ஸ்பெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார். கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாகி உள்ளவர்களை தேடி பிடிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தனிப்படை அமைத்து பழைய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மதகொண்டப்பள்ளி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாக இருந்த அசேன் ஓசூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அசேனை சுற்றி வளைத்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.