செய்திகள்

தி.மு.க. வுக்கு இந்தியாவில் உயரமான கொடி கம்பம்

Published On 2018-12-07 16:05 IST   |   Update On 2018-12-07 16:05:00 IST
இந்தியாவிலேயே மிக உயரமான கொடி கம்பம் திமுகவிற்கு அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது. 114 அடி உயரம் கொண்ட இந்த கொடி கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார். #DMK
சென்னை:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதையொட்டி பிரமாண்டமான கொடிக் கம்பம் அறிவாலய வளாகத்தில் நடப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் 114 அடி உயரத்தில் இந்த கொடி கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கம்பத்தில் ஏற்றுவதற்காக 20-க்கு 30 அடி அளவிலான மிகப்பெரிய தி.மு.க. கொடி புனேயில் தயாரிக்கப்படுகிறது. இந்த கொடி காற்றில் கிழியாதபடி ‘லேமினேட்’ முறையில் தயாரிக்கப்படுகிறது. 6 மாதம் வரை பளபளப்பாக இருக்கும். அதன்பிறகு மீண்டும் புது கொடி மாற்றப்படும்.

இந்த கம்பத்தில் கயிறு மூலம் கொடி ஏற்றப்பட மாட்டாது. கொடி ஏற்றுவதற்காக மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கொடிக் கம்பத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். சிலை திறப்பு விழாவுக்கு முன்னதாகவே கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. #DMK #DMKFlag
Tags:    

Similar News