செய்திகள்

தஞ்சை பெரியகோவிலில் நடைபெற உள்ள தியான பயிற்சி வகுப்புக்கு இடைக்கால தடை

Published On 2018-12-07 09:29 GMT   |   Update On 2018-12-07 09:29 GMT
தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்களை உடனே அகற்ற உத்தரவிட்டனர். #Tanjoretemple #SriSriRaviShankar
மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.

தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற உள்ளது.

இது முற்றிலும் விதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

மேலும் இந்த அமைப்பினர் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அவசர வழக்காக 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து வெங்கட், மதுரை ஐகோர்ட்டில் அவசர மனுவினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்கள் உடனே அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர். #Tanjoretemple #SriSriRaviShankar

Tags:    

Similar News