செய்திகள்

மயிலாடுதுறை அருகே மணல் கடத்தல் குறித்து துப்பு கொடுத்த தி.மு.க. பிரமுகர் படுகொலை

Published On 2018-11-30 16:27 IST   |   Update On 2018-11-30 16:27:00 IST
மயிலாடுதுறை அருகே மணல் கடத்தல் குறித்து துப்பு கொடுத்த தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே புளியந்தோப்பு கிராமம் சாந்தக்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற மருதவாணன் (வயது 52). குறிச்சி ஊராட்சி தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு உமா என்ற மனைவியும், ஓரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் மருதவாணனின் தம்பி ராமகிருஷ்ணன் டிராக்டரில் மணல் ஏற்றி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மற்றும் சிலர் அவரை வழிமறித்து, எனது மணல் டிராக்டரை போலீசார் இன்று பறிமுதல் செய்து எடுத்து சென்றதற்கு நீதான் காரணம் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராமகிருஷ்ணன் இதுபற்றி தனது அண்ணன் மருதவாணனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் உடனடியாக மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு சென்று கனகராஜ் தரப்பிடம் சமாதானம் பேசியுள்ளார்.

அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீ தான் எங்களை மணல் கடத்துவதாக போலீசில் தகவல் தெரிவித்து சிக்க வைத்துள்ளாய் என்று கூறி ஆத்திரமடைந்து கையில் இருந்த இரும்பு கம்பியால் கனகராஜ் மற்றும் 4 பேர் சேர்ந்து மருதவாணணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மருதவாணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதைக்கண்டு பதறிப்போன அவரது தம்பி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருதவாணனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிசிக்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருதவாணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மணல்மேடு போலீசில் நடந்த சம்பவம் பற்றி ராமகிருஷ்ணன் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த கொலை தொடர்பாக கனகராஜ் , ஜெயகுமார், ரஞ்சித் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் அள்ளுவது தொடர்பாக நள்ளிரவில் தம்பியின் கண்முன்னே தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News