செய்திகள்

இல்லற வாழ்வுக்காக ஆயுள் தண்டனை கைதிக்கு 15 நாட்கள் பரோல்

Published On 2018-11-30 07:09 GMT   |   Update On 2018-11-30 07:09 GMT
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு இல்லற வாழ்வுக்காக 15 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
சென்னை:

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 28). இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், பெருமாளின் மனைவி முத்துமாரி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, என் கணவர் சிறையில் இருந்து வருகிறார். எனது இல்லற வாழ்வுக்காக அவருக்கு 2 வார காலம் பரோல் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அனைத்து குற்றவாளிகளுக்கும் தங்களது இல்லற வாழ்வை தொடர உரிமை இருப்பதாக ஐகோர்ட்டு மதுரை கிளை ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதை மனுதாரர் வக்கீல் சுட்டிக்காட்டி வாதிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

பெருமாளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அந்த உத்தரவில், ‘பெருமாள் பரோலில் செல்லும்போது, சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் பெருமாள் வெளியில் செல்வதால் அவரது பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு வருகிற ஜனவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை சிறை துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #MadrasHC
Tags:    

Similar News