செய்திகள்

புயலால் சேதம்: வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்க 5 லாரிகளில் மூங்கில்கள் வரத்து

Published On 2018-11-30 05:20 GMT   |   Update On 2018-11-30 05:20 GMT
தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன. #Gajastorm

தஞ்சாவூர்:

கஜா புயல் தஞ்சை மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தொடங்கி கடைகோடி பகுதியான அதிராம்பட்டினம் வரை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் உள்ள அனைத்து தென்னை, பனை மரங்கள், புளியமரங்கள், அரசமரம், ஆலமரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. இதில் ஏராளமான குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இது தவிர 15 ஆயிரம் குடிசை வீடுகள் பகுதியாகவும், 52 ஆயிரத்து 137 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.

இது தவிர தென்னை மரங்கள் விழுந்ததில் ஏராளமான மாடி வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. வீடுகள் சேதம் அடைந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்குவதற்காக இடவசதி இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

சிலர் தார்ப்பாய் மூலம் தற்காலிகமாக குடிசை போன்று அமைத்து அதில் வசித்து வருகிறார்கள். சிலர் அருகில் உள்ள மற்ற வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த மூங்கில்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மூங்கில்கள் பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை அமைப்பதற்காக வழங்கப்பட உள்ளன. #Gajastorm

Tags:    

Similar News