செய்திகள்
கணவர்களை இழந்ததால் தீக்குளிக்க முயன்ற ரேவதி, முத்துக்கண்ணு ஆகியோரை படத்தில் காணலாம்

கஜா புயலால் கணவர்களை இழந்த பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-11-27 10:49 GMT   |   Update On 2018-11-27 10:49 GMT
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் கணவர்களை இழந்த பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #KarurCollectorOffice
கரூர்:

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பாலவிடுதி சிங்கம் பட்டி பகுதியை சேர்ந்தவர் வைர பெருமாள் (வயது 46). கடந்த 16-ந்தேதி கஜா புயல் கரையை கடந்த பின்னர் வீசிய பலத்த காற்றினால் இவரின் வீட்டின் அருகே நின்ற ராட்சத இலவம் பஞ்சு மரமும், மின்கம்பமும் சாய்ந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வைரப்பெருமாள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் (48) அடுத்த 2-வது நாளில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட வைரபெருமாள் மனைவி ரேவதி, பாலசுப்பிரமணியனின் மனைவி முத்துக்கண்ணு ஆகிய இருவரும் கடவூர் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் நிவாரண உதவி கேட்டு மனு அளித்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த இருவரும் நேராக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தபோது திடீரென ரேவதியும், முத்துக்கண்ணுவும் கணவன்மார்களை இழந்து விட்டதால் வாழ்வாதாரம் போய்விட்டது. எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்எண்ணை கேனை பறித்து, இருவரையும் கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் அன்பழகன், நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #GajaCyclone #KarurCollectorOffice
Tags:    

Similar News