செய்திகள்
தலைமறைவாக உள்ள ஜெயசித்ரா- தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த மிதுன்

பண்ருட்டி அருகே 2 குழந்தைகள் கொலை?- தலைமறைவாக உள்ள தாயை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

Published On 2018-11-02 11:13 GMT   |   Update On 2018-11-02 11:13 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 குழந்தைகள் சாவில் உள்ள மர்மம் தொடர்பாக தலைமறைவாக உள்ள தாயை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா(வயது 27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லட்சன் வீட்டில் இருந்து அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்தான். அப்போது தாய் ஜெயசித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் பிடித்த போது, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்தது என்று தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை விட்டு விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார். அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மிதுன் யூ.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுன் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து சிலம்பரசன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே 2 மாவட்ட போலீசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயசித்ராவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்து, அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகம் படும்படியாக யாராவது இருந்தார்களா? என்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை சோதனை செய்து வருகின்றனர். ஜெயசித்ராவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினால் தான் 2 குழந்தைகள் எப்படி இறந்தது என்று தெரிய வரும்.
Tags:    

Similar News