செய்திகள்
சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியபோது எடுத்த படம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்- அன்புமணி ராமதாஸ்

Published On 2018-10-30 10:46 GMT   |   Update On 2018-10-30 10:46 GMT
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம் என சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #AnbumaniRamadoss
சிதம்பரம்:

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி கடலூர் தெற்குமாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

சிதம்பரம் பா.ம.க.வின் கோட்டை. டெல்டா பகுதிக்கு மோடி அரசால் ஆபத்து வந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்க 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் காவிரி டெல்டா பகுதியில் அமைந்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும். 85 கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். மக்கள் அகதியாகி விடுவார்கள்.

கடலூர், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கொள்ளிடம் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பெரும் ஆபத்தை உண்டாக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் 30 அடி அகலத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். இதற்காக பூமிக்கு கீழே உள்ள பாறைகள் சக்திவாய்ந்த வெடி வைத்து தகர்க்கப்படும். இதனால் நில அதிர்வு ஏற்படும். அதுமட்டுமல்ல, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படும்.

தமிழகத்தில் உள்ள பூமி இன்னும் ஆயிரமாயிரம் காலம் நன்றாக இருக்கவேண்டும். நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழவேண்டும். இந்த பகுதியில் யாராவது ஆழ்துளை கிணறுகள் அமைக்க குழாய்களை இறக்கினால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் மக்களை கண்டு கொள்வதில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். போராட்டமும் நடத்துவோம்.

மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதை கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் முன்வருவோம். எனக்கு பதவி ஆசை கிடையாது. நான் 35 வயதினிலேயே பதவியை பார்த்துவிட்டேன். மக்களை பற்றி நினைக்காமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கல்லாக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரப்போகின்றது. எனவே ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்கவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர நாங்கள் விடமாட்டோம் இவ்வாறு அவர் பேசினார். #AnbumaniRamadoss
Tags:    

Similar News