செய்திகள்

மதுராந்தகம் அருகே 20 நாய்கள் வி‌ஷம் வைத்து கொலை - கொள்ளை கும்பல் அட்டூழியம்

Published On 2018-10-29 07:17 GMT   |   Update On 2018-10-29 07:17 GMT
மதுராந்தகம் அருகே 20 நாய்கள் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டாக வீடுகளில் கட்டப்பட்டு இருந்த ஆடு, மாடு மற்றும் கோழிகள் தொடர்ந்து திருடு போய் வந்தன. மேலும் கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி நடந்து வந்தது.

இதையடுத்து திருட்டு- கொள்ளை சம்பவங்களை தடுக்க கரசங்கால் கிராமத்தில் உள்ளவர்கள் ஏராளமானோர் வீடுகளில் நாய்களை வளர்க்க தொடங்கினர்.

மர்ம நபர்கள் கிராமத்துக்குள் நுழையும் போது நாய்கள் குரைத்ததால் அவர்கள் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் கரசங்கால் கிராமத்தில் கடந்த 6 மாதமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்தன.

இந்த நிலையில் கரசங்கால் கிராமத்தில் உள்ள தெருக்களில் நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. அவை வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் இறைச்சியில் வி‌ஷத்தை கலந்து வீச்சி சென்று உள்ளனர். இதனை தின்ற 20 நாய்கள் இறந்துள்ளன.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒரத்தி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளை கும்பலுக்கு தடையாக நாய்கள் இருந்ததால் அவற்றை வி‌ஷம் வைத்து கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கால்நடைகள் திருட்டு அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து வீட்டிலும் நாய்கள் வளர்க்க தொடங்கினர். இதனால் கடந்த 6 மாத காலம் கால்நடைகள் திருட்டு போவது குறைந்து இருந்தது.

நேற்று முன்தினம் இரவு இறைச்சியில் பூச்சி மருந்தை வைத்து தெரு முழுவதும் திருட்டு கும்பல் வீசி உள்ளனர். அதை சாப்பிட்ட நாய் மற்றும் நாய்குட்டிகள் 20-க்கும் மேற்பட்டவை பலியாகி உள்ளது.

இறைச்சியில் வி‌ஷம் வைத்தது போல பிஸ்கெட் மற்றும் திண்பண்டத்தில் கலந்து போட்டு இருந்தால் ஆடு, மாடு மற்றும் குழந்தைகளும் பலியாகி இருக்கும். நாய்களை வி‌ஷம் வைத்து கொன்ற கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News