செய்திகள்

தீபாவளியன்று இரவு ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகம் ஏற்படும் - பொதுமக்கள் கருத்து

Published On 2018-10-24 05:41 GMT   |   Update On 2018-10-24 05:41 GMT
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை அனைவரும் ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு அதிகமாகும். புகை மண்டலம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Deepavali
சிவகாசி:

தீபாவளியன்று இரவில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து பட்டாசு தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

சிவகாசியை சேர்ந்த தொழிலாளி சுந்தரமூர்த்தி கூறியதாவது:-

தற்போது பருவமழை சீசன் உள்ளது. தீபாவளியன்று இரவு நேரத்தில் மழை பெய்தால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போய்விடும். தீபாவளி பண்டிகை என்பது தீமையை அழித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தினமாகும். தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த இரவு வரை காத்திருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.

மேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அனைவரும் ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு அதிகமாகும். புகை மண்டலம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்றார்.



பிரபு என்பவர் கூறுகையில், பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலை நம்பித்தான் உள்ளது. இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இதனால் அரசு வேலையை எதிர்பார்க்காமல் இளைஞர்கள் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உழைப்பாளிகளை உருவாக்கும் தொழிலாக பட்டாசு தொழில் உள்ளது. எனவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அதிக நேரம் கொடுக்க வேண்டும். இந்த தொழிலை பாதுகாப்பதுடன் அதன் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Deepavali

Tags:    

Similar News