செய்திகள்
சஸ்பெண்டு செய்யப்பட்ட டிரைவர் விஜயகுமார்.

பிரேக் பிடிக்கல... விளக்கு இல்ல எனக்கூறியது வாட்ஸ் அப்பில் வெளியானதால் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

Published On 2018-10-09 11:26 IST   |   Update On 2018-10-09 11:26:00 IST
அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் மோசமாக உள்ளன என்ற டிரைவரின் புலம்பல் வாட்ஸ்அப்பில் வீடியோவாக வெளியானதால் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். #DriverSuspended
பழனி:

பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் டிரைவராக பணியாற்றிவரும் பஸ் ஓட்டை உடைசல் குறித்து வாட்ஸ்அப்பில் வெளியானதால் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பழனி அருகே கீரனூரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது45). பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து பழனிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது மழை பெய்ததால் பஸ் ஒழுகியுள்ளது. டிரைவர் இருக்கை அருகிலுள்ள ‌ஷட்டர் வேலை செய்யாததால் நனைந்தபடியே விஜயகுமார் பஸ்சை இயக்கியுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த விஜயகுமார் போதிய பராமரிப்பு இல்லாததால் அரசு பஸ்கள் மோசமாக உள்ளன. உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பாதுகாப்பில்லை என புலம்பியுள்ளார்.



இதை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதற்கிடையே பேசிக்கொண்டே அஜாக்கிரதையாக பஸ் ஓட்டியதாக கூறி விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். இது சக ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், போதிய பராமரிப்பின்றி அரசு பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. பல பஸ்களில் பிரேக் பிடிப்பதில்லை. இதுதொடர்பாக பஸ்சில் நான் பேசியதை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார்.

இதனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மக்களுக்கு தெரியவந்தது. தங்கள் மீதான தவறை மறைக்க என்னை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். பயணிகள், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டே பேசினேன். எனவே சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார். #DriverSuspended



Tags:    

Similar News