செய்திகள்

நெல் கொள்முதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்

Published On 2018-10-06 08:41 GMT   |   Update On 2018-10-06 08:41 GMT
நெல் கொள்முதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உழவர்கள் நலனில் தமிழக பினாமி ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமும் அக்கறையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை விற்கவும் முடியாமல், பாதுகாக்கவும் முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக ஆட்சியாளர்களின் இந்த உழவர் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி முடிவடையும் காலத்தை அடிப்படையாக வைத்து நெல் கொள்முதலை தொடங்குவதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந்தேதி நெல் கொள்முதலுக்கான விலையை தமிழக அரசு அறிவிக்கும். ஆனால், அக்டோபர் மாதம் பிறந்து 6 நாட்களாகியும் இன்று வரை 2018-19-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளிலும் வட கிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் அறுவடையை முடிக்க உழவர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றுள்ள விவசாயிகள், கடந்த 5 நாட்களாக பல்வேறு காரணங்களைக் கூறி கொள்முதல் செய்யப்படாததால் அங்கேயே காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாக காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் தண்ணீர் புகுந்து நெல் முளைக்கத் தொடங்கியுள்ளது.

நெல்லுக்கான கொள்முதல் விலைகளை தீர்மானிப் பதில் தமிழக அரசுக்கு எந்த சுமையும் இல்லை. நெல் கொள்முதலைப் பொறுத்தவரை தமிழக அரசு மத்திய அரசின் முகவராக மட்டுமே செயல்படுகிறது. நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த ஜூலை 4ஆம் தேதியே அறிவித்துவிட்டது. சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1550 ரூபாயிலிருந்து 1750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை 1590 ரூபாயிலிருந்து 1770 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையுடன் ஊக்கத்தொகையை மட்டும் சேர்த்து தமிழக அரசு அறிவித்தால் போதுமானது. கடந்த பல ஆண்டுகளாகவே சன்ன ரகத்திற்கு ரூ.70, சாதாரண ரகத்திற்கு ரூ.50 மட்டுமே ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

ஆனால், அதைக்கூட செய்ய முடியாத அளவுக்கு ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறதோ?

உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் அவனுக்கு ஊதியம் வழங்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உழவர்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும். விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாமல் முளைத்து விட்டால், உழவர் குடும்பங்களின் வாழ்க்கை கருகி விடும்.

எனவே, இனியும் தாமதிக்காமல், மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலையுடன், நியாயமான ஊக்கத்தொகை சேர்த்து புதிய கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; நெல் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss

Tags:    

Similar News