செய்திகள்

நீலகிரி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2018-10-06 08:51 IST   |   Update On 2018-10-06 08:51:00 IST
கனமழை காரணாக நீலகிரி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #TNRain #SchoolHoliday #RedAlert
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்து வரும் பகுதிகளில், சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.



திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில்  பள்ளி,  கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று  விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை நாட்காட்டியின்படி இன்று மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். #TNRain #SchoolHoliday #RedAlert
Tags:    

Similar News