செய்திகள்
தனகோட்டிராம்

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்வோம் - அரசு வக்கீல்

Published On 2018-09-26 07:46 GMT   |   Update On 2018-09-26 07:46 GMT
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். #ActorRajkumar #Veerappan
கோபி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்ட காஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 30-7-2000 அன்று சந்தன கடத்தல் வீரப்பன், அவனது கூட் டாளிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

இது தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மற்றவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.

இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு கூறினார்.



குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இந்த வழக்கு தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டதாகும். இந்த வழக்கில் அரசு தரப்பில் 47 சாட்சிகள், 51 ஆவணங்கள், 32 சான்று பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விரிவான நகலை பெற்று, இரு மாநில அரசு அதிகாரிகளுடனும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து 9 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்.

இவ்வாறு வக்கீல் தனகோட்டிராம் கூறினார்.  #ActorRajkumar #Veerappan



Tags:    

Similar News