செய்திகள்
வடமாநில வாலிபரை போலீசார் பிடித்து வேனில் ஏற்றியபோது எடுத்தபடம்.

விருத்தாசலத்தில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கொடூரமாக தாக்கிய வடமாநில வாலிபர்

Published On 2018-09-25 10:36 GMT   |   Update On 2018-09-25 10:36 GMT
விருத்தாசலத்தில் இன்று காலை வீடு புகுந்து கணவன், மனைவியை வடமாநில வாலிபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் மணி(வயது 50). இவரது மனைவி ராஜம்(45). மணி அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் விருத்தாசலம் ரெயில்வே ஜங்‌ஷன் அருகில் உள்ள ரெயில் நகரில் வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அந்த வீடு அப்பகுதியில் தனிவீடாக அமைந்துள்ளது.

இதனால் கணவன்- மனைவி இருவரும் அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு நெய்வேலிக்கு சென்று விடுவார்கள்.

இந்நிலையில் இன்று காலை கணவன்-மனைவி இருவரும் விருத்தாசலம் ரெயில் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். ராஜம் மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வட மாநில வாலிபர் ஒருவன் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ராஜத்தை சரமாரியாக தாக்கினான்.

அப்போது அவரது கணவர் மணி ஓடி வந்து தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக தாக்கினான். இதனால் கணவன், மனைவி இருவரும் பயந்தபடி தங்கள் வீட்டுக்குள் ஓடி சென்று கதவை பூட்டிகொண்டனர். அப்போது அந்த மர்ம வாலிபர் வீட்டின் பின்புற கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான்.

கணவன்-மனைவி இருவரையும் களை கொத்தியால் கொடூரமாக தலையில் வெட்டினான். இதில் அவர்களது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.

இதுகுறித்து தொலைபேசி மூலம் விருத்தாசலத்தில் உள்ள உறவினர்களுக்கு மணி தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நின்ற அந்த மர்ம வாலிபர் பிடித்து விசாரித்தனர். அவர்களையும் அந்த மர்ம நபர் சரமாரியாக தாக்கினான்.

இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த வடமாநில மர்ம வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

 கொடூர தாக்குதலில் காயமடைந்த கணவன்-மனைவி இருவரும் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

தகவல் அறிந்து விருதாச்சலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வாலிபரை மீட்டு வேனில் ஏற்றினார்கள்.

அப்போது அவன் போலீசாரையும் தாக்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கை, கால்களை கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அந்த வாலிபரால் தாக்கப்பட்ட மணி, அவரது மனைவி ராஜம் ஆகியோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் மேலும் அவருடன் 2 வாலிபர்கள் வந்தது தெரியவந்தது. தப்பி ஓடிய அந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News