செய்திகள்

கடலுக்குள் பாலம் அமைக்க எதிர்ப்பு- படகில் முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

Published On 2018-09-17 15:06 GMT   |   Update On 2018-09-17 15:06 GMT
உடன்குடி அருகே கடலுக்குள் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் படகில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த‌ அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக கடலினுள் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைந்தால் மீன்வளம் பாதிக்கப்படும், இயற்கை வளங்கள் அழியும் என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று(திங்கட்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்லை.

பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுப்படகு மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கு கடலுக்குள்ளேயே படகுகளில் நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அனல்மின் நிலைய திட்டத்திற்கு எதிராகவும், கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். மீனவர்களின் படகுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லாமொழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடலோர காவல் படையினரும் கடலுக்குள் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

மேலும் கல்லாமொழி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் புன்னக்காயல் முதல் வேம்பார் வரை அந்தந்த பகுதியில் திரண்டு நாட்டுப் படகுகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் படகு களில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 190 படகுகளுடன் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூட்டப்பனை, இடிந்தகரை, கூடுதாழை, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த‌ 8000 நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

மேலும் மீனவர்கள் கடலில் இறங்கி முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். #tamilnews
Tags:    

Similar News