செய்திகள்

வேலூரில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2018-09-14 10:32 GMT   |   Update On 2018-09-14 10:32 GMT
வேலூரில் வைக்கப்பட்டுள்ள 1008 விநாயகர் சிலைகள் நாளை மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது. #VinayagarChathurthi #GaneshChathurthi
வேலூர்:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டுசென்று கரைப்பதற்கு 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலூரில் வைக்கப்பட்டுள்ள 1008 விநாயகர் சிலைகள் நாளை (சனிக்கிழமை) மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது.

இதற்காக சதுப்பேரி ஏரியில் மாநகராட்சி சார்பில் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சத்துவாச்சாரியில் இருந்து புறப்படும் ஊர்வலம் காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின்பஜார், லாங்குபஜார், அண்ணா கலையரங்கம் வரை செல்கிறது. அதேபோன்று நகரின் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளும் அண்ணாகலையரங்கம் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோட்டை சுற்றுச்சாலை, முள்ளிப்பாளையம், கொணவட்டம் வழியாக சென்று சதுப்பேரி ஏரியை அடைகிறது.

விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியான முறையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் வேலூரில் விநாயகர்சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. #VinayagarChathurthi  #GaneshChathurthi

Tags:    

Similar News