செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் - தடகள வீரர் அவினாசி தருண் பேட்டி

Published On 2018-09-10 16:44 IST   |   Update On 2018-09-10 16:44:00 IST
ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்று ஊர் திரும்பிய இந்திய வீரர் அவினாசி தருண் கூறியுள்ளார்.
திருப்பூர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி பதக்கம் வென்றார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த அவர் நேற்று காலை தனது ஊருக்கு வந்தார். அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஊர் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தருணுக்கு, மலர் கிரீடம் சூட்டினர். பள்ளி மாணவர் குழுவினர், பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவிநாசியை சேர்ந்த முகமது சுல்தான் என்பவர், தருணுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

பின், சொந்த ஊரான ராவுத்தம்பாளையம் கிராமத்துக்கு சென்றார். ஊர் எல்லையில், சின்னாரிபாளையம், வலையபாளையம், ராவுத்தம்பாளையம் கிராம மக்கள், மேள தாளம் முழங்க, வரவேற்பளித்தனர்.

அவிநாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். தருண் அய்யாசாமி கூறும்போது. பதக்கம் வென்றது பெருமையளிக்கிறது. வரும் நாட்களில், போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பேன். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.
Tags:    

Similar News