செய்திகள்

புதுவைக்கு சுற்றுலா வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தல்

Published On 2018-09-09 16:56 GMT   |   Update On 2018-09-09 16:56 GMT
புதுவையில் பெண் அதிகாரிகள் அதிகமாக இருந்தும் சுற்றுலா வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாளைய தினம் காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர். காங்கிரஸ் நடத்தும் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது. போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் பெட்ரோல்- டீசல் விற்பனை வரியை 5 சதவீதம் குறைக்கலாம். பெட்ரோல்- டீசல் விலை ஏற்றத்தை நாங்களும் (அ.தி. மு.க.) எதிர்க்கிறோம்.

கடந்த 15 நாட்களாக புதுவையில் அதிகார மோதல் இல்லாமல் இருந்தது. நேற்றைய தினம் காரைக்காலில் கவர்னர் கிரண்பேடி பேசும் போது தரமான அரிசியும், முறையான டெண்டரும் இல்லாததால் இலவச அரிசி வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இனி வருங்காலத்தில் இலவச அரிசி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்ப தாகவும் அவர் கூறி உள்ளார்.

இந்த காங்கிரஸ் அரசு கடந்த 26 மாதங்களில் 10 மாதங்கள் மட்டுமே இலவச அரிசி வழங்கி உள்ளது. பட்ஜெட்டின் போது இலவச அரிசி திட்டங்களுக்கு ரூ.200 கோடிக்கு பதில் ரூ.120 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது. கவர்னர் கிரண்பேடி காரைக்காலில் பேசியது அமைச்சர் கந்தசாமியை மிரட்டுவதற்காக இருக்கலாம். இலவச அரிசிக்கு முறைகேடாக டெண்டர் விட்டதிலும், தரமற்ற அரிசி கொள்முதல் செய்த அரசு அதிகாரிகள் மீதும் கவர்னர் நடவடிக்கை எடுப்பாரா?

புதுவையில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா துறையின் தவறான கொள்கை முடிவால் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் பெண் ஊழியர்கள் மானபங்கம், மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனது தொகுதியில் மது அருந்தும் பாருடன் கூடிய 3 ஓட்டல்கள் உள்ளன.

நேற்றைய தினம் ஒரு ஓட்டலில் நடந்த இரவு நடனத்தில் பங்கேற்ற 2 வடமாநில பெண்களை அவர்களது ஆண் நண்பர்களை அடித்து உதைத்து விரட்டி விட்டு அந்த பெண்களை சிலர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அந்த பெண்கள் அலறியடித்து கொண்டு இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்- அமைச்சர் சட்டம்-ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. இந்த அரசு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் பெண் அதிகாரிகள் அதிகமாக உள்ளனர். கவர்னர், போலீஸ் டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு என பெண்களே உள்ளனர். இவ்வளவு பேர் இருந்தும் புதுவை சுற்றுலா வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News