செய்திகள்

கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லாததால் பட்டுக்கோட்டை, பேராவூரணியில் கடையடைப்பு - மறியல்

Published On 2018-09-04 12:29 GMT   |   Update On 2018-09-04 12:29 GMT
காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பட்டுக்கோட்டை, பேராவூரணியில் விவசாயிகள், வர்த்தக சங்கங்கள் இன்று கடையடைப்பு, மறியல் போராட்டம் நடத்தினர்.
பட்டுக்கோட்டை:

கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக தமிழகத்துக்கு உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து ஜூலை 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. இதனால் காவிரியில் வெள்ளம் வந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லையென்று புகார் தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பணைகள் இல்லாததாலும், ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாராததாலும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதனால் கடைமடை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் கடைமடைக்கு தண்ணீர் வராமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறந்து விடக்கோரி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் இன்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், மற்றும் மருந்து கடை சங்கம், வர்த்தக சங்கம், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் பட்டுக்கோட்டை நகர் முழுவதும் இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் பட்டுக்கோட்டை நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் அனைத்து விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர், மற்றும் வியாபார சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைமடைக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் தரையில் அமர்ந்தப்படியும், படுத்தப்படியும் கோ‌ஷமிட்டனர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு தான் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் தரமறுக்கிறார்கள் என்று விவசாயிகள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இதேபோல் பேராவூரணியிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு அனைத்து கட்சிகள், வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

பேராவூரணியில் பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ‘பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

இதேபோல் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத கிராம மக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் போராட்டத்தையொட்டி பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News