செய்திகள்

பிரம்மா குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகி இன்று சென்னை வருகை

Published On 2018-09-03 12:12 IST   |   Update On 2018-09-03 12:12:00 IST
பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆசீர்வாத உரை நிகழ்த்துகிறார். #BrahmaKumaris #DadiJanaki
சென்னை:

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி, இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனி விமானத்தில் இன்று மதியம் சென்னை வரும் தாதி ஜானகி, அங்கிருந்து அண்ணா நகரில் உள்ள தமிழக மண்டல தலைமையகத்திற்கு வருகிறார். இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க ஊர்வலமாக அழைத்து வரப்படும் அவருக்கு தலைமையகத்தில் தாய்மார்கள் பூ மற்றும் கைவிளக்குகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

பின்னர் மாலை 6 மணியளவில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தாதி ஜானகி ஆசீர்வாத உரை நிகழ்த்துகிறார். இதில், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக இயக்கத்தின் கூடுதல் செயலர் ராஜயோகி பிரிஜ் மோகன் (டெல்லி) பொன் யுகத்திற்கான இறைவனின் ஞானம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

நாளை காலை சுங்குவார்சத்திரத்தில் உள்ள பிரம்மா குமாரிகளின் சிறப்பு பயிற்சி மைய கட்டிடத்திற்கான பூமி பூஜையில் தாதி ஜானகி பங்கேற்கிறார். அதன்பின்னர் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் விழாவில் ஆசீர்வாத உரை நிகழ்த்துகிறார். இதையடுத்து இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். மறுநாள் (செப்-5) சென்னையில் இருந்து புறப்பட்டு இயக்க தலைமையகம் உள்ள மவுண்ட் அபுவிற்கு புறப்பட்டுச் செல்கிறார்.

103 வயது நிரம்பிய தாதி ஜானகி, தனது வயது முதிர்வு மற்றும் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ஆன்மீக சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #BrahmaKumaris #DadiJanaki
Tags:    

Similar News