செய்திகள்

பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் - மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை

Published On 2018-09-03 05:35 GMT   |   Update On 2018-09-03 05:35 GMT
பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் கூறிய மாணவியிடம் வேளாண் பல்கலை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. #ChennaiStudentharassment #AgriCollege
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மாணவி தங்கி இருந்த விடுதியின் வார்டன்களான பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, 40 பக்க புகார் கடித்தத்தை மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி கொடுத்தார்.

அதில், 7 மாதங்களுக்கும் மேல் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பிறகு, கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி ‘இன்னும் எத்தனை நிர்மலாதேவிகள் உள்ளனர் என்றுக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

மாணவி பாலியல் விவகாரத்தில் ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வேளாண் பல்கலைக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழுவும் கல்லூரிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் பாலியல் புகார் கூறிய மாணவியிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று 2 விசாரணை குழு அமைப்புகள் திருவண்ணாமலைக்கு வந்து முகாமிட்டு உள்ளன.

மாணவியை விசாரணைக்கு ஆஜராக வேளாண் பல்கலை ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக விசாரணை குழு முன்பு மாணவி ஆஜராகி பேராசிரியர்களின் பாலியல் தொல்லை குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

இதேபோல், மனித உரிமை அமைப்பும் சென்னையில் இருந்துவந்துள்ளது. மாணவி மற்றும் பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #ChennaiStudentharassment #AgriCollege

Tags:    

Similar News