செய்திகள்

பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர் கைது

Published On 2018-09-02 16:15 IST   |   Update On 2018-09-02 16:15:00 IST
தியாகதுருகத்தில் பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டரை மருத்துவ குழுவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தியாகதுருகம்:

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள திருக்கோவிலூர் சாலையில் வசித்து வருபவர் சலாவுதீன். இவருடைய மனைவி நர்கீஸ் பானு (வயது 38).

இவர் தனது வீட்டின் முன்பு உள்ள ஒரு அறையில் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். நர்கீஸ் பானு எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாக விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

அதன் பேரில் விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சுந்தர்ராஜ் தலைமையில் சங்கராபுரம் பகுதி மருந்து ஆய்வாளர் தீபா, விழுப்புரம் நிர்வாக அலுவலர் நடராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், டாக்டர் கவிதா உள்ளிட்டோர் நர்கீஸ் பானுவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நர்கீஸ் பானு பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்ததும், வீட்டிலேயே நோயாளிகளுக்கு மருந்து- மாத்திரைகள் கொடுத்ததும், குளுக்கோஸ் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் நர்கீஸ் பானுவை பிடித்து தியாகதுருகம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்கீஸ் பானுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News