செய்திகள்

சாதாரண கட்டியை சிசு என்று கருதி சிகிச்சை- இளம்பெண் புகாருக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் மறுப்பு

Published On 2018-08-28 16:15 IST   |   Update On 2018-08-28 16:15:00 IST
கர்ப்பிணி எனக் கூறி தவறான சிகிச்சை அளித்ததாக இளம்பெண் அளித்த புகாரை அரசு ஆஸ்பத்திரி டீன் மறுத்துள்ளார்.
மதுரை:

மதுரை விரகனூர் கோழிமேட்டைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 32). இவரது மனைவி யாஸ்மின் (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் யாஸ்மினுக்கு வயிற்றில் சிசு உருவாகி இருப்பது போன்று தெரிந்துள்ளது. இதனால் அவர் விராதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து அதற்கான சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து கர்ப்பிணிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறிப்பிட்ட பிரசவ நாளில் பிரசவ வலி இல்லாததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் யாஸ்மினை பரிசோதித்தனர்.

அப்போது தான் அவருக்கு வயிற்றில் குழந்தை இல்லை என்பதும், வயிற்றில் கட்டி இருப்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நவநீதகிருஷ்ணன் இழப்பீடு கோரி மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தார். இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

யாஸ்மின் 3 குழந்தைகளை பெற்று கடந்த 2013-ம் ஆண்டு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சான்றிதழுடன் வந்ததால் விராதனூர் கிராம சுகாதார செவிலியர், யாஸ்மினை கர்ப்பிணி என்று பதிவு செய்துள்ளார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரசு ஆஸ்பத்திரியிலும் அவர் புற நோயாளியாக வந்து ரத்த பரிசோதனை மட்டும் செய்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். ஸ்கேன் பரிசோதனைக்காக யாஸ்மினை உள் நோயாளியாக அனுமதித்தபோதும் 2 முறை தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் நழுவிச் சென்றுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பல தவறான தகவல்களை கொடுத்து கர்ப்பிணி என்று கூறி வந்துள்ளார். அரசு ஆஸ்பத்திரிகள் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் யாஸ்மின் இவ்வாறு செய்துள்ளார்.

இவ்வாறு டீன் கூறினார்.
Tags:    

Similar News