செய்திகள்

குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் கிராம மக்களால் தாக்கப்பட்ட டிரைவர் பலி

Published On 2018-08-28 06:46 GMT   |   Update On 2018-08-28 06:46 GMT
குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் கிராம மக்களால் தாக்கப்பட்ட சென்னை கார் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Childkidnapping

போளூர்:

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (வயது 65). இவர் தனது உறவினர் வெங்கடேசன், அவரது மருமகனும் கார் டிரைவருமான கஜேந்திரன் (35). மலேசியா உறவினர்கள் மேகான்குமார், சந்திரசேகர் ஆகிய 5 பேரும் கடந்த மே மாதம் 9ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த அத்திமூர் தம்புகொட்டான்பாறை அருகில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் குழந்தை கடத்த வந்தவர்கள் என தவறாக கருதி கிராம மக்கள் அவர்களை துரத்தி தாக்கினர்.

இதில் மூதாட்டி ருக்குமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். அவரிகளில் கார் டிரைவர் கஜேந்திரன் என்பவர் தொடர்ந்து கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 3 மாதமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் நினைவு திரும்பாமலேயே நேற்று மாலை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போளுர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் சென்னைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 45 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பலரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தற்போது போளுர் போலீஸ்ஸ்டேசனில் தினமும் கையெழுத்து போட்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்து 3 மாதம் கடந்தும் இந்த வழக்கு தொடர்பாக இது வரை குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யபடவில்லை. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 73 பேரையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News