செய்திகள்

குடிநீர் இணைப்பு வழங்கியதில் ரூ.3½ கோடி முறைகேடு - சிதம்பரம் நகராட்சியில் 5 அதிகாரிகள் சஸ்பெண்டு

Published On 2018-08-07 12:21 IST   |   Update On 2018-08-07 12:21:00 IST
சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் ரூ.3½ கோடி முறைகேடு செய்தது தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கடந்த 2012-17-ம் ஆண்டில் வீடுகளுக்கு புதிதாக மீட்டருடன் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக ரூ.1  கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

சிதம்பரம் நகராட்சியில் ஏற்கனவே 5 ஆயிரத்து 300 இணைப்புகள் இருந்தன. ஆனால், புதிதாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்து அதற்கான பணம் முறைகேடு செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதேபோல் சிதம்பரம் கனகசபை, பஸ் நிலையம் பகுதிகளில் நீர் உந்துநிலையம் அமைக்க ரூ.11 லட்சத்து 49 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் குடிநீர் அளவீட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை.

நல்லாம்புத்தூரில் சேதமடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணற்றை சீரமைக்காமலேயே சீரமைத்ததாக கணக்கு காண்பித்து அதற்குரிய செலவின தொகை பெறப்பட்டுள்ளது.

பழுது மற்றும் பராமரிப்புக்காக ரூ.1 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் இடத்தில் பொருத்த வேண்டிய குடிநீர் வால்வுகள் அமைக்கப்படவில்லை.

சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் மொத்தம் ரூ.3½ கோடி அளவில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய சிதம்பரம் உதவி செயற்பொறியாளர்கள் அசோகன், பாண்டியன், விஜயகுமார், உதவி பொறியாளர்கள் விஜயலட்சுமி, காசிநாதன், சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News